Tuesday 2 December 2014

சனிப்பெயர்ச்சி 2014




சனிப்பெயர்ச்சி திருக்கணிதப் பஞ்சாங்கம் 2-11-2014,
 வாக்கியப் பஞ்சாங்கம் 16-12-2014

சனி பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் : மிதுனம், கன்னி, மகரம்.

அசுபப்பலனை எதிர் கொள்ளும் ராசிகள்: மேஷம், ரிஷபம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, கும்பம்.

மேஷம்: அஷ்டமசனி
ரிஷபம்: கண்டசனி
சிம்மம்: அர்த்தாஷ்டமசனி
துலாம்,விருச்சிகம்,தனுசு: ஏழரைசனி
கும்பம்:ஜீவனசனி

மேலும் ஏழரைச் சனி ஒருவரது வாழ்வில் பொதுவாக மூன்று முறை வரும். அதில் முதல் முறை வருவது மங்கு சனி எனப்படும், இரண்டாம் முறை வருவதை பொங்கு சனி என்றும், மூன்றாம் முறை வருவதை மரணச்சனி என்பர். எனவே இரண்டாம் முறையாக ஏழரை சனியை அனுபவிக்க இருப்பவர்கள் அதிக கவலைப்படத் தேவையில்லை. சிலருக்கு நல்ல வளர்ச்சி, முன்னேற்றம், வீடு கட்டுதல் போன்ற நீண்டநாள் கனவுகள் இந்தக் கால கட்டத்தில் நடைபெற வாய்ப்புண்டு. மற்றவர்களுக்கு, அவரவர் சுயஜாதகத்தில், தசாபுத்தியின் அடிப்படையில் சிரமங்கள் குறையும்.


பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு  எள் தீபம் ஏற்றுவது நன்மை தரும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்தால், மிகுந்த நன்மை தருவார். மேலும் திருநள்ளாறு போன்ற கோயில்களுக்கு சென்று அர்ச்சனை செய்து வரலாம். ஐயப்பனையும், ஆஞ்சநேயரையும் வழிபட்டு வந்தால் சனி தோஷம் விலகி நன்மை ஏற்படும்.


மேஷ ராசி: இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து பல கஷ்டங்களையும், நஷ்டங்களை தந்த சனிபகவான் இப்போது எட்டாம் வீட்டில் அஷ்டம சனியாக இருந்து செயல்படப் போகிறார். எனவே நீங்கள் எதிலும் கொஞ்சம் நிதானித்து செயல்படுவது நல்லது.
குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படும். தோல்வி மனப்பான்மை தலைத்தூக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. விபத்துகள் ஏற்படக்கூடும். வரவுக்குமேல் செலவுகள் ஏற்படும், மனைவி வழி உறவினர்களுடன் பிரச்சினைகள் வரும்.

சனிபகவான் இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் நீங்கள் சாதாரணமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். பணப்பற்றாக்குறை ஏற்படும். சனிபகவான் ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால் சுற்றியிருப்பவர்கள் தன்னை ஏமாற்றுவதாக நினைத்துக் கொள்வீர்கள். சனிபகவான் எட்டாம் வீட்டைப் பார்ப்பதால் வாழ்க்கையில் திடீர் திருப்பம் உண்டாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். பெரிய முதலீடுகள் போட்டு வியாபாரம் செய்ய ஏற்ற காலமல்ல, வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள்.
உத்தியோகத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும். புது வாய்ப்புகளும், எதிர்பார்த்த சலுகைகளும் சற்று தாமதமாகி கிடைக்கும்.

மாணவர்களுக்கு நினைவாற்றல் குறையும். ஒருமுறைக்கு இருமுறை நினைவுக்கூர்ந்து படிப்பது  நல்லது.

ரிஷப ராசி: இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து முன்னேற்றத்தை தந்த சனிபகவான் இப்போது ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார், சனிபகவான் உங்களுக்கு யோகாதிபதியாக வருவதால் உங்கள் ராசிக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்த மாட்டார் என்றாலும் கணவன் மனைவிக்குள் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. திருமண வயதில் உள்ளவர்களுக்கு களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் சனி அமர்வதால் திருமணம் தள்ளிப் போகும். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். உறவினர், நண்பர்களுடன் வரம்பு மீறிப் பேச வேண்டாம். உத்தியோகம், வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தை பிரிய வேண்டி வரும். 

சனிபகவான் ராசியைப் பார்ப்பதால் சோம்பல் உண்டாகும், சனிபகவான் நாலாம் வீட்டை பார்ப்பதால் வாகனங்களில் பழுதுகள் ஏற்படும். தாயார் உடல் நிலை பாதிக்கும். சனிபகவான் ஒன்பதாம் வீட்டைப் பார்ப்பதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். தந்தையாருக்கு உடல்நலம் பாதிக்கப்படும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும், பங்குதாரர்களால் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். சக ஊழியர்களுடன் பிரச்னைகள் வந்து போகும். 

மாணவர்களுக்கு சற்று சோம்பேறித்தனம் ஏற்படும், கவனமாக படிக்கவேண்டிய காலமிது.

மிதுன ராசி: இதுவரை உங்களின் ஐந்தாம் வீட்டில் இருந்த சனிபகவான் இப்போது ஆறாம் வீட்டில் அமர்ந்து நற்பலன்களை அள்ளித் தரவுள்ளார்.
இதுவரை எப்போது பார்த்தாலும் ஒரு குழப்பத்துடன் இருந்த நீங்கள் இனி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். உங்கள் பேச்சிற்கு முக்கியத்துவம் தருவார்கள்.  
சனிபகவான் மூன்றாம் வீட்டை பார்ப்பதால் தைரியம் கூடும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சனிபகவான் எட்டாம் வீட்டை பார்ப்பதால் நயமாகப் பேசுபவர்களை நம்பி சொந்த விஷயங்களையெல்லாம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். 
சனிபகவான் பன்னிரண்டாம் வீட்டை பார்ப்பதால் சுப நிகழ்ச்சிகளை எடுத்து நடத்துவீர்கள். சில வீண் விரயங்களும் உண்டாகும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் இருந்து வந்த அதிருப்தி விலகும். உயரதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். சக ஊழியர்களுடன் இருந்த மோதல்கள் நீங்கும். விரும்பிய இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு.   

மாணவர்கள் படிப்பில் முன்னேறுவார்கள், போட்டிகளிலும் வெற்றி பெறுவார்கள்.

கடக ராசி: இதுவரை சுகஸ்தானத்தில் அமர்ந்து பல மன சங்கடங்களையும், தாயாருக்கு உடல் நல பாதிப்பையும், பணப்பற்றாக்குறையையும் தந்த சனிபகவான் இப்போது பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்வதால குடும்ப பிரச்சினைகள் தீரும், தாயார் உடல்நலம் சீராகும், பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு உங்களுக்கு சாதகமாகும். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். வாகன யோகம் உண்டு.

சனிபகவான் வாக்கு ஸ்தானத்தை பார்ப்பதால் பேச்சில் கவனம் தேவை. கண்களில் பாதிப்பு ஏற்படும், வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். சனிபகவான் களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்படும், கூட்டாக தொழில் செய்பவர்களுக்குள் பிரச்சினைகள் ஏற்படும், சனிபகவான் லாப ஸ்தானத்தை பார்ப்பதால் வருமானம் அதிகமாகும், புது யுக்திகள் மூலம் லாபத்தை அதிகப்படுத்துவீர்கள். இரும்பு சம்பந்தப்பட்டபொருட்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். வேலைச்சுமை குறையும். உயரதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள்.

மாணவவர்கள் பெற்றோரை விட்டு பிரிந்து வெளியூர்களில் தங்கிப் படிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம், மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி தடுமாற்றங்களில் இருந்து விடுபட்டு செல்வாக்கையும் தருவதாக அமையும். 

சிம்மம் ராசி: இதுவரை ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்த சனிபகவான் இப்போது நாலாம் வீட்டில் அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் இக்காலக்கட்டத்தில் மன நிம்மதி குறையும், சிறு வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். தாயாருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும், ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களைக் கூட அலைந்து போராடித் தான் முடிக்க வேண்டி வரும். தோல்வி மனப்பான்மையால் மன இறுக்கம் உண்டாகும். சொத்து வாங்குவதாக இருந்தால் வழக்கறிஞரை கலந்தாலோசித்து வாங்குவது நல்லது. கணவன் மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். 

சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் அவ்வப்போது சோர்வு, வயிற்று உபாதைகள் வந்து நீங்கும். சனிபகவான் ஆறாம் வீட்டைப் பார்ப்பதால் கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். மறைமுக எதிரிகளை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். சனிபகவான் தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் உத்தியோகத்தில் விரும்பத்தகாத இடமாற்றங்கள், அலைச்சல்கள் ஏற்படும். அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள்.

மாணவர்கள் அலட்சியமாக இருக்காமல் கவனத்துடன் படித்தால் வெற்றிபெறலாம்.

கன்னி ராசி:  இதுவரை தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் பாதச் சனியாக அமர்ந்து பணப்பற்றாக்குறையையும், குடும்ப பிரச்னைகளையும், மேலும் உங்களை சற்று கடுமையாகவும் பேச வைத்த சனிபகவான் இப்போது மூன்றாம் வீட்டிற்கு செல்வதால் குடும்ப பிரச்சினைகள் தீரும். பண வரவு சீராகும், தன்னம்பிக்கை உண்டாகும். உங்கள் ஆலோசனைகளை மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். உடல் நலம் சீராகும். சந்தோஷம் பெருகும். சொத்துப் பிரச்னைகள் முடிவுக்கு வரும். பெரியவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அளிப்பீர்கள்.
வியாபாரம் பெருகும், கடன் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும், உயரதிகாரிகளிடம் நற்பெயர் சம்பாதிப்பீர்கள், வேலைச்சுமை குறையும். ஆடை, ஆபரணம் சேரும். திருமணதடை விலகும்.சனிபகவான் மூன்றாம் பார்வையால் ஐந்தாம் பாவத்தையும், ஏழாம் பார்வையால் பாக்கிய ஸ்தானத்தையும் பத்தாம் பார்வையால் விரயஸ்தானத்தையும் பார்ப்பதால் பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்படும், அதேநேரம் பிள்ளைகளுக்கு சில பாதிப்புகளும், தந்தையாருக்கு உடல்நல பாதிப்புகளும் ஏற்படும், 

மாணவர்களுக்கு  நினைவாற்றல் கூடும். படிப்பில் முன்னேறுவர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவர்.
அடிக்கடி பயணங்கள், மற்றும் கெட்ட கனவுகளால் தூக்கமின்மை போன்ற சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மொத்தத்தில் இந்த சனிப் பெயர்ச்சி இதுவரை சந்தித்து வந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு மன நிம்மதியுடன் வாழ வழி செய்யும் என எதிர் பார்க்கலாம்.

துலாம் ராசி:  இதுவரை ஜென்மச் சனியாக இருந்த சனிபகவான் இப்பொழுது உங்கள் ராசியை விட்டு விலகி பாதச் சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார். 
எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலையுடன் இருந்த நீங்கள் இனி கவலை நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.  குடும்பத்தில் நிலவிய இறுக்கமான சூழ்நிலை விலகி மகிழ்ச்சி ஏற்படும்.
பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். மற்றவர்களின் மனநிலையை உணரத் தொடங்குவீர்கள் என்றாலும் பாதச்சனியாக வருவதால் வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். குடும்பத்திலும் அவ்வப்போது சலசலப்புகள் வரும்.

சனிபகவான் சுக ஸ்தானத்தை பார்ப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள், தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து விலகும். எட்டாம் வீட்டை பார்ப்பதால் வீண் அலைச்சல், சிறுசிறு விபத்துகள்ஏற்படும். லாப வீட்டைப் பார்ப்பதால் திடீர் செல்வம், செல்வாக்குக் கூடும். சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும். மூத்த சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.  

வியாபாரத்தில் இனி லாபம் வரும். போட்டியாளர்களை அனுபவ அறிவால் வெல்வீர்கள். வாடிக்கையாளர்களிடம் அன்பாக அரவணைப்பாக பேசும் வேலையாட்களை நியமனம் செய்வீர்கள். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். பங்குதாரர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். உத்தியோகத்தில் அமைதியான சூழல் உருவாகும். மாறுபட்ட அணுகுமுறையால் உயரதிகாரியை கவர்வீர்கள். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும் என்றாலும் அவர்களுடன் அளவாகப் பழகுங்கள். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். 

மாணவர்கள் இனி நன்றாகப் படிப்பர், நல்லவர்களின் நட்பால் முன்னேறுவர். விளையாடும் போது கவனம் தேவை. சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும்.

விருச்சிக ராசி: இதுவரை உங்களின் ராசிக்கு பனிரெண்டில் அமர்ந்து கொண்டு பல பிரச்னைகளையும், தூக்கமின்மையையும் தந்த சனிபகவான் இப்பொழுது  ஜன்மச் சனியாக அமர்கிறார். இனி சமயோஜித புத்தியுடனும் நடந்து கொள்வீர்கள். அவசர தேவைக்கு கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகி அமைதி திரும்பும். ஆனால் ராசிக்குள் சனி அமர்ந்து ஜென்மச் சனியாக வருவதால் ஆரோக்யத்தில் இனி நீங்கள் அதிக அக்கறை காட்ட வேண்டியது வரும். சரியான நேரத்திற்கு மருத்துவரை ஆலோசித்து மருந்து, மாத்திரை உட்கொள்வது நல்லது. கணவன் மனைவிக்குள் அவ்வப்போது பிரச்சினைகள் வந்துப் போகும். எதுவாக இருந்தாலும் மனம் விட்டு பேசி முடிவுகள் எடுங்கள், உறவினர், நண்பர்களில் ஒருசிலர் உங்களை விட்டு ஒதுங்குவார்கள். யாராக இருந்தாலும் நெருங்கிப் பழகுவதை தவிர்க்கவும்.
முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். 

சனிபகவான் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால் சவால்களை சமாளிக்க வேண்டி வரும். ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துப் போகும். தன்னம்பிக்கையும் குறையும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்துப் போகும். ஏழாம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு சிறுசிறு உடல்நல பாதிப்புகள் வந்துப் போகும். சனிபகவான் பத்தாம் வீட்டை பார்ப்பதால் உத்தியோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைப் பார்க்க வேண்டி வரும். சிலர் சுயத் தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும். 

வியாபாரத்தில் அதிக முதலீடுகளை தவிர்த்து இருப்பதை வைத்து லாபம் சம்பாதிக்கப் பாருங்கள். போட்டியாளர்கள் அதிகரிப்பார்கள். வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள். முக்கிய வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களால் பிரச்னைகள் வரும்.  
உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். பணிகளை சற்று போராடி முடிக்க வேண்டி வரும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைளைக் கூட போராடி பெற வேண்டி வரும்.

மாணவர்கள் பொழுதுபோக்குகளை தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்துங்கள். கூடாப்பழக்க வழக்கங்களை விட்டு விடுங்கள்.

தனுசு ராசி:  இதுவரை பதினொன்றாம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு ஓரளவு பணப்புழக்கத்தையும், அந்தஸ்தையும் பெற்று தந்த சனிபகவான் இப்போது ஏழரைச் சனியின் தொடக்கமாக பன்னிரண்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் முன்எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது நல்லது. 
எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். எளிதாக முடித்து விடலாம் என நினைத்த காரியங்களைக் கூட போராடித் தான் முடிக்க வேண்டி வரும். வீண் அலைக்கழிப்புகள் அதிகமாகும். எதிர்காலம் பற்றிய பயம் வந்துப் போகும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். தூக்கம் குறையும். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் முடிந்த வரை பேசி முடிக்கப்பாருங்கள்.

சனிபகவான் இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு உண்டு என்றாலும் பற்றாக்குறையும் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்றப் போக்கு நிலவும். பேச்சில் கடுமை காட்ட வேண்டாம்.
சனிபகவான் ஆறாம் வீட்டைப் பார்ப்பதால் வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். பழைய கடன் பிரச்னையை நினைத்து அவ்வப்போது குழம்புவீர்கள். 
சனிபகவான் ஒன்பதாம் வீட்டைப் பார்ப்பதால் தந்தைக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும். வீண் செலவுகள் ஏற்படும்.

வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வேலையாட்களை அவர்கள் போக்கிலே விட்டுப் பிடிப்பது நல்லது. பங்குதாரர்கள் அவ்வப்போது பிரச்சனை செய்தாலும் இறுதியில் உங்கள் பேச்சுக்கு கட்டுப்படுவார்கள். உத்தியோகத்தில் சவால்களை சந்திக்க நேரிடும். உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.
மாணவர்கள் விளையாட்டுத்தனத்தைக் குறைத்துக் கொண்டு பாடத்தில் கவனம்செலுத்தினால் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

மகர ராசி: இதுவரை தொழில் ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் இப்போது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் புகழ் உயரும். கடினமான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். குடும்ப வருமானம் உயரும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். தம்பதியர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். செலவுகளைக் குறைத்து இனி சேமிக்கத் தொடங்குவர். சமூகத்தில் மதிக்கத்தகுந்த வகையில் உயர்வு பெறுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
சனிபகவான் ராசியைப் பார்ப்பதால் தன்னம்பிக்கை குறையும். சனிபகவான் ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால் பிள்ளைகளின் உயர்கல்வி முயற்சிகள் தாமதமாகும். சனிபகவான் எட்டாம் வீட்டைப் பார்ப்பதால் வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.    
வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். வேலையில் இருப்பவர்களுக்கு புது பொறுப்புகள் தேடி வரும். இழந்த மதிப்பு மரியாதையை மீண்டும் பெறுவீர்கள். 

திருமணம் தடைபட்டுவந்த பெண்களுக்கு நல்ல வரன் அமையும், கல்வியில் வெற்றியுண்டு. பெற்றோரின் ஆலோசனையை ஏற்பீர்கள். மாணவர்களுக்கு படிப்பிலிருந்த மந்த நிலை மாறும். ஆர்வத்துடன் படிப்பார்கள், எதிர்பார்த்த கல்விநிறுவனத்தில் உயர்கல்வி தொடர இடம் கிடைக்கும். மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சி மிகவும் நன்மையானதாக அமையும்.

கும்ப ராசி: இதுவரை பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த ராசிநாதன் சனிபகவான் தற்போது தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாவதால் புதிய முயற்சிகள் வெற்றியடையுமென்றாலும் அதிக முதலீடுகளை செய்வதற்கு ஏற்ற காலமல்ல, மனப்போராட்டங்கள் ஓயும், வருமானத்தை உயர்த்த முற்படுவர், நிர்வாகத் திறன் அதிகரிக்கும். கணவன் மனைவி பிரச்சினைகள் சற்று ஓய்வெடுக்கும், தந்தையின் உடல் நலம் சீராகும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கப் பெறலாம். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வழக்கில் வெற்றி பெறுவர்.

சனிபகவான் சுக ஸ்தானத்தை பார்ப்பதால் தாயாருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும், வாகனத்தில் அடிக்கடி பழுதுகள் ஏற்படும், சனிபகவான் விரய ஸ்தானத்தை பார்ப்பதால் செலவுகள் அதிகமாகும், தூக்கம் குறையும். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். 
ஜீவன ஸ்தானத்தில் சனி வந்தமர்வதால் உத்தியோகத்தில் உயர்வு உண்டு என்றாலும் வீண் பழியும் வரக்கூடும். திடீர் இடமாற்றம் ஏற்படலாம், வேலைச்சுமை அதிகரிக்கும், சிலருக்கு அயல்நாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வரும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். 
மாணவ மாணவிகள் படிப்பில் முன்னேறுவர், நல்ல நண்பர்கள் கிடைப்பர்.

மீன ராசி: இதுவரை அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பல பாதிப்புகளை ஏற்படுத்திய சனிபகவான் இப்போது ஒன்பதாம் வீட்டில் அமர்வதால் பாதிப்புகளில் இருந்து விடுபடுவீர்கள்
வீண் விவாதங்களும், மன உளைச்சலும் இனி விலகும். குடும்பத்தினர் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். குடும்பத்தில்  இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும்.
தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பழைய பிரச்னைகள், சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள்.  திட்டியவர்கள் எல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். ஆரோக்யம் கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஆனால் தந்தையாருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை ஏற்படும், வீண் செலவுகள் ஏற்படும்,

சனிபகவான் மூன்றாம் வீட்டை பார்ப்பதால் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்துப் போகும். சனிபகவான் ஆறாம் வீட்டை பார்ப்பதால் எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். சனிபகவான் லாப வீட்டைப் பார்ப்பதால் மதிப்பு, மரியாதைக் கூடும். பணம் வரும் என்றாலும் செலவுகளும் இருக்கும்.
வியாபாரத்தில் முன்புபோல் நஷ்டம் வராமல் இருக்க, புது யுக்திகளை கையாளுவீர்கள். வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். கடையை விரிவுபடுத்தி அழகு படுத்துவீர்கள்.
உத்தியோகத்தில் அலட்சியப் போக்கு மாறும். வேலைச்சுமை குறையும். சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். அதிக சம்பளத்துடன் நல்ல வாய்ப்புகளும் வரும்.
மாணவர்கள் உயர்கல்வியில் வெற்றி பெற்று, ஆசிரியரின் அன்பைப் பெறுவர். 




No comments:

Post a Comment